Thursday, May 1, 2008

நிஜமணிந்து...

அடி வயிற்றிலிருந்து துக்கம்
பீறிட,
அனைவரையும் கலங்கடித்த
அழுகை,
நாத்தனாரின் அழுகையை
விஞ்சியது.

சொத்து& பத்துக்களை
இனி பிரிப்பது எப்படி--?
என்கிற சோகம் மூத்த மகனின்
அழுகையில்
தொக்கி நின்றது.

பெற்றெடுத்த நால்வரில்
இனி யார் தான்
கஞ்சி ஊற்றுவார்கள்
என்கிற
கவலை
சுமங்கலியின்
தொண்டை குழியை
அடைத்தது.

சம்பிரதாய
சாங்கியம்
செய்து முடிக்க
கவலையோடு
காத்திருக்கும்
பங்காளிகள்.

எதிர்பார்ப்பில்,
அபகரிக்கும் ஆசையில்,
பொறாமையில்,
இப்படி
வெவ்வேறு சிந்தனையிலும்
எண்ண ஓட்டத்திலும்
துக்க வேடமணிந்து
சவத்தைச் சுற்றி பலர்...
ஆனால்,
நிஜமணிந்து சவம்.
- இன்னொருவன்.

Saturday, April 12, 2008

ஏதேன் சமூகம்

கனிகள் இல்லை...
இலைகளும் இல்லை...
காயசண்டிகைப் பசியில்
கடிபட்ட கிளைகள்...
ஆனால்
சர்ப்பங்கள் பசியோடிருக்கின்றன.
நிர்வாண ஆடையணிந்து
ஆதாமும் ஏவாளும்...
குற்ற உணர்வு
குதறியெடுக்க
ஞானமர மறைவில்
யாரோ ஒருவர்.
- இன்னொருவன்

Friday, March 21, 2008

சாபசங்கமம்

பிறகு தான்
தெரிந்தது.
அது மாய நதி.
யதேச்சையாய்
பாதங்களைப்
பார்த்தேன்.
மிக ஆழத்தில்
ஜல்லி வேர்களும்
ஆணி வேரும்...
எனது கிளைகளில்
கழுகுகளின் கூடுகள்.
பழைய மாமிச வாசம்
புட்களை விரட்டின.
மார்பகப் பூக்களை
கவ்விப்பிடிருத்திருக்கும்
அட்டைப் பூச்சிகள்...
எல்லாம் குழப்பம்...
குனிந்துப் பார்த்தேன்
தடாலென தரையில்
விழுந்து
நொறுங்கியது
எனது மூளை...
அள்ளியெடுத்து
மறுபடியும் தலையில் வைத்துகொண்டேன்.
அவசரமாய்
கடிதம்
எழுத எழுதுகோலை
திறந்தேன்...
நாற்றம்
அறையை நிரப்பியது.
மூச்சு முட்டியது.
விழித்துக் கொண்டேன்.
- இன்னொருவன்

Thursday, March 13, 2008

அலைகளுக்கு வெட்கமில்லை…

அலைகளுக்கு வெட்கமில்லை…
மணற்கிரீடை மயக்கத்தில்
கட்டிப் பிடித்து காதல் செய்வோரை
எட்டிப் பார்க்கும்
இந்த
அலைகளுக்கு வெட்கமில்லை…
வெயில் விரிப்பில்…
முழுநீள மேலாடை மறைவில்…
ஆயிரம் பார்வைகள் அள்ளித் தெளிக்கும்
கதகதப்பில்…
கட்டிப் பிடித்து
மயங்கிக் கிடக்கும் காதலர்களை
ஓயாமல்
எட்டிப் பார்க்கும்
இந்த
அலைகளுக்கு வெட்கமில்லை…
-இன்னொருவன்

தகவல் டாட் கா(ம)ம்

தொடாமல் - படாமல்

நீரிஸ் என்பது ஆழ்கடலில் வசிக்கும் மீனினம். கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட இந்த மீனினத்தில் ஆணும், பெண்ணும் நேரில் சந்தித்து கொள்வது அபூர்வம். மௌனம் தவழும் இரவு நேரத்தில், நிலவொளியில், யொவன அந்த தருணங்களில், கடலின் மேற்பரப்பிற்கு வரும் இந்த மீனினத்தின் ஜோடிகள் தள்ளி நின்றவாரே தங்களை மறந்து ஆனந்த நடனமாடும். இறுதியில் ஒரு காந்த சக்தி உருவாகி, இரு மீன்களையும் இணைக்கும். பின்னர் என்ன? பெண் நீரிஸ் அம்மாவாகிவிடும். தொடாமல், படாமல் அம்மாவாகும் அதிசயம் மீனினத்தில் உண்டு.

Wednesday, March 12, 2008

ஆத்ம சுகம்

உள்ளுக்குள் இருக்கிறது...
உறங்கவிடுவதில்லை.
கவிதை என்பார்...
குப்பை என்பார்...
எனக்குப் பெயர் தெரியவில்லை...
அர்த்தம் தேடும் ஆராய்ச்சியும் இல்லை...
அவரவர் பார்வைக்கேற்றாற்போல்
மேக பிம்பம் ...
தேடுதல் இல்லாததும்,
விளங்கிக்கொள்ள
விரும்பாததும்
ஆத்ம சகம்
- இன்னொருவன்